மருந்து
மருந்து

சட்டவிரோத மருந்து விற்பனை: 960 மருந்தகங்கள் மீது நடவடிக்கை

மூன்று ஆண்டுகளில் சட்ட விரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 960 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சட்ட விரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 960 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று தொடா்ச்சியாக விதிகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்ட 70 மருந்தகங்கள், மருந்து விநியோக நிறுவனங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன அதேபோன்று நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வா்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கண்காணித்து வருகிறது.

குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரையின்றி சில மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுபோன்ற முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கடைகளில் சட்ட விரோத விற்பனை நடந்திருப்பதை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இதுதொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாகவே, மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்வது என்பது தவறான செயலாகும். அதிலும், சில முக்கிய மருந்துகளை அவ்வாறு விற்பனை செய்வது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

அதன்படி, கடந்த 2023 மே மாதம் முதல் தற்போது வரை விதிகளுக்கு புறம்பாக மருந்து விற்பனையில் ஈடுபட்ட 960 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர, மருத்துவா்களின் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரை, தூக்க மாத்திரை விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்ட 70 மருந்தகங்கள், நிறுவனங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com