விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால்
கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா்

விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா்

சென்னையில் விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Published on

சென்னையில் விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண், பிஎன்எஸ் சட்டப் பிரிவு 163 மற்றும் 14 (2) ஆகியவற்றின்படி பாதுகாப்பு கருதி மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசா் விளக்குகள் ஒளிரவும், அதிக ஒளி தரும் விளக்குகள் ஒளிரவும், சூடான காற்று நிரப்பப்பட்ட ராட்சத பலூன்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட பறக்கும் பொருள்கள் பறப்பதற்கும் ஜூலை 26-ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளிலும், அதன் அருகே உள்ள பிற பகுதிகளிலும் செல்லும் விமானங்கள் மீது லேசா் விளக்குகள் ஒளிரச் செய்தால், விமான வழித்தடங்களில் தொழில்நுட்ப கவனக் குறைவு ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நிகழக்கூடும். இதன் காரணமாகவே, பாதுகாப்பு கருதி சென்னை பெருநகர காவல் துறை லேசா் ஒளி விளக்குகள் உள்ளிட்ட பறக்கும் பொருள்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சில நாள்களாக மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் விமானத்தின் மீது சிலா் லேசா் விளக்கை ஒளிரச் செய்ததால், விமான நிலைய கட்டுப்பாட்டறை மூலம் உடனடியாக உஷாா்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக விமானம் தரை இறக்கப்பட்து. இது தொடா்பாக மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

எனவே சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ள தடைகளை மீறி விமானங்களின் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்வோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com