
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்குள்ளாக்குவதாக கடும் கண்டனப் பதிவை இன்று(ஜூன் 7) வெளியிட்டுள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்(தவெக).
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கண்டனப் பதிவில், கிளாம்பாக்கத்தில் ஜூன் 4-ஆம் தேதி இரவுமுதல் வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் பேருந்து இல்லாமல் சிரமப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தவெக, தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கைக்குழந்தைகளுடன் அலைக்கழிக்கப்பட்டிருப்பது மன வேதனையளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து, நள்ளிரவில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பயணிகள் குடும்பத்துடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதையும் தவெக சுட்டிக்காட்டி அரசை விமர்சித்துள்ளது.
கிளாம்பாக்கம் என்றாலே கிளர்ச்சிப்பாக்கம் என்று விமர்சிக்கும் வகையில், பேருந்து வசதியின்றி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகுவதே இன்னும் தொடர்கதையாகி வருவதாக தவெக குறிப்பிட்டிருக்கிறது.
ஆட்சியாளர்கள் மக்களை பற்றி அக்கறை கொண்டிருப்பின் இப்படி நடந்து கொள்வார்களா? என்று அரசுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் முறையான பேருந்து சேவைகள் இல்லாதது கடும் கண்டனத்திற்கு உரியது. திருவிழா காலங்கள், விடுமுறை நாள்களில் கிளாம்பாக்கத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு அதிக பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக தவெக வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.