2026 பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: அமித் ஷா

”தமிழ்நாட்டு மக்கள் அந்த மாற்றத்தை கொண்டு வருவது உறுதி”: அமித் ஷா
மதுரையில் அமித் ஷா
மதுரையில் அமித் ஷா
Published on
Updated on
2 min read

மதுரை: மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் 2026ல் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீநிவாசன், அண்ணாமலை உள்பட பல முக்கிய நிர்வாகிகளும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றிய அமித் ஷா ஹிந்தியில் பேசியதை மேடையிலிருந்த மொழி பெயர்ப்பாளர் தமிழில் உடனுக்குடன் மொழிப்பெயர்த்து பேசினார்.

அவர் பேசியதாவது: “பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை நோக்கி சீராக முன்னேறி வருகிறது. பஹல்காமில், பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதம் என்ன என்பதை கேட்டறிந்த பின் கொடூரமாக குறிவைத்து கொன்றனர்.

ஆனால், பிரதமர் மோடியின் தலைமையில், நமது ஆயுதப் படைகள் இந்த பயங்கரவாதிகளை அவர்களின் சொந்த மண்ணிலேயே வெற்றிகரமாக வீழ்த்தின. நமது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் விமானப்படை தளங்களையும் தகர்த்துள்ளன. இதன்மூலம், உள்நாட்டு தொழில்நுட்பத்தின் வலிமை பறைசாற்றப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்று மோடி தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா வலுவான பதிலடிகளை வழங்கத் தொடங்கியது. அதற்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு உதாரணம்”.

“நான் தில்லியில் இருந்தாலும் எனது செவிகள் தமிழ்நாட்டின் மீதே கவனம் செலுத்துகின்றன. திமுக அரசின் சரிவு ஆரம்பம் என்பதை இந்த பாஜக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் வெளிக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் 2026ல் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்.

அமித் ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாதென தமிழ்நாட்டின் முதல்வர் பேசுகிறார், ஆனால், அவர் சொல்லியிருப்பதில் ஒரு உண்மை உள்ளது. அமித் ஷா திமுகவை வீழ்த்த மாட்டார், மாறாக, தமிழ்நாட்டு மக்கள் அந்த மாற்றத்தை கொண்டு வருவது உறுதி.

ஊழலின் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டது திமுக அரசு. மோடி அரசால் ரூ. 450க்கு தமிழ்நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து தொகுப்பை, ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைத்து முறைகேட்டுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. ரூ.4,600 கோடி மணல் சுரங்க முறைகேட்டிலும் திமுக அரசு கூடுதலாக ஈடுபட்டுள்ளது. இதன் தாக்கம் ஏழைகளின் வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதிகளில் 60 சதவீதத்தைக் கூட நிறைவேற்றவில்லை திமுக அரசு.

2025இல் தில்லியில் வெற்றிகரமாக ஆட்சி அமைத்தோம். 2026இல் எங்களது தலைமையில் ஒரு புதிய அரசு அமைய தமிழ்நாடு வழி வகுக்க வேண்டும். அதே ஆண்டில் பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் அரசு அமைக்க உள்ளன” என்றார்.

நேற்றிரவு மதுரைக்கு வந்தடைந்த அமித் ஷா, இன்று காலை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தமது பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இன்று தில்லி திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com