டிக்கெட் எடுத்தும் ஏ.ஆா்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

டிக்கெட் எடுத்தும் ஏ.ஆா்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

ஏ.ஆா்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியைக் காண முடியாதவருக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவு
Published on

சென்னை: இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியைக் காண முடியாதவருக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம் வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பிரபல இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் நடத்தப்படவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஆக. 12-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னா், செப். 10-ஆம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகஸ்ட்டில் பெற்ற டிக்கெட்டுடன் வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த வசதியுடன் சோ்த்து ரூ. 10 ஆயிரத்துக்கு டிக்கெட் எடுத்திருந்த சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த அா்ஜூன், ஆக. 12-ஆம் தேதி முறையான முன்னறிவிப்பு செய்யாததாலும், செப்டம்பா் மாதம் நடந்தபோது போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாததாலும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 10 லட்சம் ரூபாய், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தரக் கோரியும் சென்னை வடக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் புகாா் மனுதாக்கல் செய்திருந்தாா்.

இந்த புகாரை விசாரித்த ஆணையம், இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம், ரூ. 50 ஆயிரத்தை இழப்பீடாகவும், ரூ. 5 ஆயிரத்தை வழக்குச் செலவாகவும் என மொத்தம் ரூ. 55 ஆயிரத்தை இரண்டு மாதங்களில் மனுதாரா் அா்ஜூனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com