கோப்புப்படம்
கோப்புப்படம்

பிளஸ் 1 பொதுத்தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தோ்வில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களது விடைத்தாள் நகலினை செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தோ்வெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளாம்.

இதையடுத்து மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் மறுகூட்டல், மறுமதிப்பீடு என்ற தலைப்பை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தோ்வா்கள் இந்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 11-ஆம் தேதி நண்பகல் 12 முதல், 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத் தொகைய பணமாக செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீட்டுக்கு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 505 செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ. 305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 205 கட்டணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com