எம்.பி. ஆகிறார் கமல்! 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது பற்றி...
kamal haasan nomination for Rajyasabha MP election
மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு கமல்ஹாசன் வேட்புமனு செய்தபோது...DIN
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலுக்காக தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலக கூடுதல் செயலா் சுப்பிரமணியம் தோ்தல் நடத்தும் அதிகாரியாகவும், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவைச் செயலக இணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனா்.

திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கல் நேற்று(திங்கள்கிழமை) மாலையுடன் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 13 போ் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று(செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கி நடைபெற்றது. இதில் திமுகவின் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், அதிமுகவின் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் முன்மொழிவு கடிதம் இல்லாததால் அனைத்து சுயேச்சைகளின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முதல்முறையாக எம்.பி.யாகிறார்.

வரும் 12-ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்களைத் திரும்பப்பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னா் போட்டியிருந்தால் 19-ம் தேதி தோ்தல் நடைபெறும். போட்டி இல்லையெனில் ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com