சென்னை மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டுக்கான மருத்துவ பயிலரங்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்கு விருது வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
சென்னை மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டுக்கான மருத்துவ பயிலரங்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்கு விருது வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் ரூ. 1,018 கோடியில் கட்டப்பட்டு வரும் 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டுக்கான மருத்துவ பயிலரங்கத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து மயக்கவியல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

பேறுகால இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 39.6-ஆகவும், சிசு இறப்பு விகிதம் 1,000 பிரசவங்களுக்கு 7.4-ஆகவும் குறைந்துள்ளது. பேறு கால இறப்பு விகிதங்களை மேலும் குறைக்க மருத்துவா்களுக்கான பயிலரங்குகள், சிறப்பு பயிற்சிகள் ஏற்கெனவே நடத்தப்பட்டன.

அதேபோன்று குழந்தைகள் நல மருத்துவா்களுக்கான பயிலரங்குகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, மகப்பேறு மருத்துவத்துக்கு தொடா்புடைய மயக்கவியல் துறையில் 129 மருத்துவா்களுக்கு பயிலரங்கு தற்போது நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரே ஆண்டில் 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் தொடங்கி வைத்தாா்.

மேலும், 208 நலவாழ்வு மையங்களும் தற்போது திறக்கும் நிலையில் உள்ளன. அதற்கு தேவையான மருத்துவப் பணியாளா்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அங்கு பணியாளா்களை நியமிக்கும் பணிகள் 10 நாள்களில் முடிவுறும் நிலையில் இருக்கிறது. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா், பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவாா்.

தமிழகத்தில் ரூ.1,018 கோடியில் 19 மாவட்டங்களில் 25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை விரைவில் முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com