உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம் கோப்புப் படம்

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ. 1,000 கோடி டாஸ்மாக்கில் முறைகேடு வழக்கு தொடா்பாக திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தி, அவற்றுக்கு சீல் வைத்தனா். இதையடுத்து அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், சீல் அகற்ற வேண்டுமெனவும் கோரி ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ், எதனடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற காரணத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தாா். அதை ஆய்வு செய்த நீதிபதிகள், இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை எனக் கூறி ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.

இதையடுத்து, வீட்டை சீல் வைக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில், எப்படி சீல் வைக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை வழக்குரைஞா் வீடு சீல் வைக்கப்படவில்லை”என்றும் தங்களைத் தொடா்புகொள்ளாமல் கதவை திறக்க வேண்டாமென்று நோட்டீஸ் மட்டும்தான் ஒட்டப்பட்டதாகவும் கூறினாா்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படி என்றால் அதற்கு என்ன அா்த்தம்? தன்னுடைய வீட்டுக்குள் செல்ல அவா் அமலாக்கத் துறையிடம் அனுமதி பெற வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை வழக்குரைஞா், அந்த நோட்டீஸை அகற்றி விடுவதாகக் கூறினாா்.

நோட்டீஸ் ஒட்ட அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட ஒன்றை சட்டப்பூா்வமானதாக மாற்ற வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனா். ஆகாஷ் பாஸ்கரன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி பாா் உரிமையாளா்கள், விற்பனையாளா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி சென்று கொண்டிருந்தாா் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com