தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்: கர்நாடக அரசு

தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில்
Thug Life Film poster
தக் லைஃப் படத்தின் போஸ்டர்.படம்: ஆர்கேஎஃப்ஐ
Published on
Updated on
2 min read

கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிடும்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5 -ஆம் தேதி வெளியானது. சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல் பேசியது கர்நாடகத்தில் சர்ச்சையானது. அவருக்கு எதிராக கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

அதன் விளைவாக, கமல் மன்னிப்பு கேட்கும்வரை படத்தை திரையிட முடியாது என கன்னட திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எம். மகேஷ் ரெட்டி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் எம். மகேஷ் ரெட்டி மற்றும் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். அப்போது நீதிபதி உஜ்ஜல் புயான், ’கும்பல்களும், குண்டர்களும் தங்கள் கைகளில் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு வீதிக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

சட்டத்தின் ஆட்சி மட்டுமே இங்கு நிலவ வேண்டும். யாராவது ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தால், அதை மற்றொரு அறிக்கை மூலமே எதிர்க்க வேண்டும். யாராவது ஏதாவது எழுதியிருந்தால், அதை எழுத்து மூலமே எதிர்க்க வேண்டும். படம் திரையிடப்பட்டாலும் அதைப் பார்க்காமல் விடுவது மக்களின் முடிவு. ஆனால், படத்தைத் திரையிடும் திரையரங்குகள் எரிக்கப்படும் என மக்களிடையே அச்சமூட்டக் கூடாது. கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் ஜூன் 18-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.

தொடர்ந்து, நீதிபதி மன்மோகன் கூறுகையில், "மத்திய திரைப்பட தணிக்கைச் சான்றிதழ் பெற்ற எந்தப் படத்தையும் திரையிடலாம். அதற்கு நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் கடமை' என்றார்.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "இந்த விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மனு ஜூன் 20-இல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது' என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், அந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுமாறு குறிப்பிட்டனர். ஜூன் 3-ஆம் தேதி விசாரணையின்போது நடிகர் கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்குமாறு கேட்பதெல்லாம் உயர்நீதிமன்றத்தின் வேலையே கிடையாது என்றும் நீதிபதி மன்மோகன் கருத்துத் தெரிவித்தார்.

இதையடுத்து, இவ்வழக்கு இன்று(ஜூன் 19) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ”கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிடும்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதி அளித்து, இது தொடர்பான பிரமாணப் பாத்திரத்தையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கமல் பேசியது அவதூறாக இருந்தால் அவதூறு வழக்குதான் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்து கன்னட திரைப்பட வர்த்தக சபைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com