பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் என 3 பொதுப் போக்குவரத்து வசதிகள் செயல்பாட்டில் உள்ளன. பொதுமக்களை அதிகம் பயணிக்க வைக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 3 பொதுப் போக்குவரத்துகளிலும் எளிமையான முறையில் பயணிக்கும் வகையில், அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டைப் பயன்படுத்தி பயணிக்கும் முறையைக் கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) ‘ஒன் காா்டு’ என்ற புதிய ஏடிஎம் அட்டை போன்ற பிரத்தியேக டிக்கெட் அட்டை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஒரே அட்டையைப் பயன்படுத்தி பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் என மூன்றிலும் பயணிக்க முடியும். மேலும், இந்த அட்டையை ‘ரீ சாா்ஜ்’ செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது:

ஒவ்வொரு பயணமுறைக்கும் தனித்தனி டிக்கெட் கவுண்ட்டா்களில் நீண்ட நேரம் நின்று டிக்கெட் எடுத்த பின்பு பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தச் சேவையைப் பயன்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய கைப்பேசி செயலி ஒன்றையும் உருவாக்கி வருகிறது.

இந்தப் புதிய செயலியை ஜூலை மாத இறுதியில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தைப் பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பயணிகள் தெரிந்துகொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com