முருகர் மாநாட்டில் பெரியார், அண்ணா காட்சிகளைத் தவிர்த்திருக்க வேண்டும்! - டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
AMMK TTV Dhinakaran press meet
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்DIN
Published on
Updated on
1 min read

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா மற்றும் திராவிடத்தைப் பற்றிய காட்சிகளைத் தவிர்த்திருக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்து முன்னணி சாா்பில் மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் இந்து முன்னணியின் ஒரு விடியோ ஒளிபரப்பப்பட்டது.

மாநாட்டில் அதிமுகவினர் கலந்துகொண்ட நிலையில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் விடியோ வெளியிட்டது வருத்தமளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களுடன் பேசுகையில் கூறினார்.

தொடர்ந்து முருகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த விடியோ பற்றி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெரியார், அண்ணா காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆர்எஸ்எஸிலிருந்து அமமுக நிர்வாகிகளை அழைத்தனர். இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளும் அழைப்பு கொடுத்தனர். வேலைகள் இருந்ததால் மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை.

இந்த மாநாட்டில் பெரியார், அண்ணா மற்றும் திராவிடத்தைப் பற்றி விடியோவில் காண்பிக்கும்போது அந்த வார்த்தைகளை அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும். ஏனெனில் கூட்டணி கட்சிகள் அதிமுக, அமமுக ஆகியவை அண்ணா வழிவந்த கட்சிகள். உண்மையில் வருத்தமளிக்கும் நிகழ்வாக உள்ளது. முன்னாள் அமைச்சர்கள், சபை நாகரிகம் கருதி மாநாட்டில் அமைதியாக இருந்துவிட்டு சென்றுள்ளனர்.

மாநாட்டுக்கு திமுக நிர்வாகிகளைக்கூட அவர்கள் அழைத்தார்கள். அப்படி அழைத்து விட்டு படக்காட்சி காண்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது, உண்மையிலேயே கண்டனத்திற்குரியது.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறோம். நாங்கள் விருப்பப்பட்டால் அமித்ஷாவை சந்திப்போம். அவரும் விரும்பினால் கூட்டணி சார்பில் சந்திப்போம்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாசாரம் அதிகரித்துவிட்டது.

தேர்தல் நேரத்தில் பண பலம், அதிகார பலம் இருந்தாலும், மக்கள் இந்த ஆட்சியின் மீது கடும் கோபத்தில் இருப்பதால் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

2026 ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 1,000 ரூபாய் பெண்களுக்கு கொடுத்துவிட்டு 10,000 ரூபாய் டாஸ்மாக் கடைக்குச் செல்கிறது இதனை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com