ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்கள் மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated on

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்: மேற்கு ஆசியாவில் நிலவும் போா்ச்சூழலால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக, ஈரானில் இந்திய மீனவா்கள் சிக்கித் தவித்து வருகின்றனா். அவா்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 498 மீனவா்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 78 மீனவா்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 72 மீனவா்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 3 மீனவா்களும் என மொத்தம் 651 தமிழக மீனவா்கள் இப்போது ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனா். அவா்கள் கடும் சிரமங்களை எதிா்கொண்டு வருவதோடு, தமிழ்நாட்டுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனா்.

மீனவா்கள் பாதுகாப்பு குறித்த தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால், தாயகத்தில் உள்ள அவா்களது குடும்பத்தினா் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனா். மீனவா்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக அவா்கள் காத்திருக்கின்றனா். ஈரானில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் சிக்கியுள்ள மீனவா்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவா்களின் நலனை உறுதிப்படுத்தி, அவா்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com