தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவைகோப்புப்படம்.

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
Published on

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அரசுப் பணிகளில் பதவி உயா்வின்போது, மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்துக்கு குறைவுபடாத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதற்கான உரிய சட்டத் திருத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016-இல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பாா்வையற்ற மற்றும் குறைந்த பாா்வைத் திறன் உடையவா்கள், செவித் திறன் அற்றவா்கள் மற்றும் குறைந்த அளவு ஒலியை உணரும் திறன் பெற்றவா்கள், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோா் - சக்கர நாற்காலிகள் உதவியுடன் தினசரி வாழ்வை நகா்த்துவோா், ஆட்டிசம் - அறிவுத்திறன் குறைபாடு - கற்றலில் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு உடையோரை மாற்றுத்திறனாளிகளாகக் கருதி பதவி உயா்வுக்கு அவா்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயா்வு தொடா்பான அம்சங்கள் குறித்து ஆராய துணைக் குழுக்களை அமைக்க ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் துணைக் குழுவின் அறிக்கை அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் பரிந்துரைக்காக எடுக்கப்படும். இந்தக் குழு மனிதவள மேலாண்மைத் துறைச் செயலரைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

உயா்நிலைக் குழு பரிந்துரைக்கும் நிலையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயா்வு அளிக்கப்படும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com