இந்திய ரயில்வே ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம்! - முதல்வர் ஸ்டாலின்

இந்திய ரயில்வே ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதைப் பற்றி....
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்களைப் பார்த்து கையசைத்த முதல்வர் ஸ்டாலின்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்களைப் பார்த்து கையசைத்த முதல்வர் ஸ்டாலின்.
Published on
Updated on
1 min read

இந்திய ரயில்வே என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வருகிற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அதன்படி, மெயில் ரயிலில் கி.மீ.க்கு 1 பைசாவும் விரைவு ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்த முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ரயில்களின் பயணக் கட்டணத்தை வருகின்ற ஜூலை 1 முதல் உயா்த்தவும், ஆனால் 500 கி.மீ. வரையிலான 2-ஆம் வகுப்பு பயணத்துக்கு கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை. 500 கி.மீ.க்கு மேலான ஒவ்வொரு கி.மீ.க்கும் அரை பைசா வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலமாக வேலூர் சென்றார்.

அப்போது ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்திய ரயில்வே என்பது ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல ரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது.

ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது, ஏசி பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.

ஏற்கெனவே, விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! இந்திய ரயில்வே ஒரு சேவை மட்டுமல்ல - ஒரு குடும்பம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com