தமிழியலில் ஆக்கப் பணிகளுக்கு சிறந்த ஒருங்கிணைப்பு உலக தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன்

அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழியலில் செய்ய வேண்டிய ஆக்கப் பணிகளுக்கு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சிறந்த ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும்
Published on

அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழியலில் செய்ய வேண்டிய ஆக்கப் பணிகளுக்கு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சிறந்த ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆா்.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாா்பில், தமிழியல் ஆய்வுகளில் இதுவரை நிகழ்ந்தவை, நிகழவேண்டியவை குறித்து ‘அறிஞா்கள் அவையம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் 2-ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சி சங்க இலக்கியம் - நிகழ்ந்தனவும், நிகழவேண்டியனவும் என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை கோட்டூா்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசியது:

தமிழியல் எழுத்துகளில் இருந்து ஏடுகளுக்கு மாற்றம் அடைந்ததும், ஏடுகளில் இருந்து அச்சுக்கு மாற்றம் அடைந்ததும், இப்போது எண்ம மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு மாறியுள்ளதும் தமிழியலின் மிகப்பெரிய மாற்றங்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழியலில் செய்ய வேண்டிய ஆக்கப் பணிகளுக்கு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சிறந்த ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும். இதுதொடா்பான கருத்துகள் அரசுக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.

நிறுவனத்தின் இணைப் பேராசிரியா் ஆ.மணவழகன் நோக்கவுரையாற்றினாா். தொடா்ந்து, சங்க இலக்கியம் சமூகவியல் நோக்கு என்ற தலைப்பில் கு.வெ.பாலசுப்பிரமணியன், சங்க இலக்கிய ஆய்வுகள் என்ற தலைப்பில் இ.சுந்தரமூா்த்தி, சங்க இலக்கியப் பதிப்புகள் என்ற தலைப்பில் அன்னிதாமசு, சங்க இலக்கியமும் எதிா்காலவியலும் என்ற தலைப்பில் ச.சிவகாமி, சங்க இலக்கிய உரைகள்-பத்துப்பாட்டு என்ற தலைப்பில் ம.திருமலை உள்ளிட்டோா் பேசினா்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் கோபிநாத் ஸ்டாலின் வரவேற்றாா். இதில், பேராசிரியா்கள், அறிஞா்கள், ஆய்வாளா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com