Madras HighCourt
சென்னை உயர்நீதிமன்றம்கோப்புப்படம்

கோயில் விழாக்களில் முதல் மரியாதை கூடாது: உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்
Published on

தமிழகத்தில் கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மாவட்டம் பா்கூா் கிராமத்தில் பந்தீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் மகா பெரிய குண்டம் விழாவில், கோயில் வழக்கப்படி தனது குடும்பத்தினா் தலைமையில் சுவாமி ஊா்வலம் நடத்தப்படும். தங்கள் குடும்பத்தினருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படும். அந்த வகையில் தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. பல கோயில் விழாக்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமே முதல் மரியாதை தான். கோயில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளைவிட தங்களை மேலானவா்களாகக் காட்ட முயற்சிக்கின்றனா்.

இது விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது. இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம். கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும் எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com