மருந்து
மருந்து

தமிழகத்தில் தரமற்ற பாராசிட்டமால் மருந்துகள் விற்கப்படவில்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

Published on

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எந்த தரக் குறைபாடும் இல்லை என்று மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

கா்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாராசிட்டமால் - 650 எம்ஜி மருந்துகளில் சில அட்டைகள் உரிய தரத்தில் இல்லாதது கண்டறியப்பட்டது. அதுதொடா்பாக சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்திடமும் விளக்கம் கோரப்பட்டது.

காய்ச்சல், உடல் வலி பாதிப்புகளுக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் அந்த மருந்து, தரக் குறைவாக இருப்பது பொது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும், விமா்சனங்களையும் எழுப்பியது.

கா்நாடகத்தைப் போன்று தமிழகத்திலும் தரமற்ற மருந்துகள் விற்கப்படுகின்றனவா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடா்பாக, மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கா்நாடகத்தில் சில பாராசிட்டமால் மருந்துகள் மட்டுமே தரமற்றவை எனத் தெரியவந்துள்ளது. மாறாக, அனைத்து பாராசிட்டமால் மருந்துகளும் அத்தகைய நிலையில் இல்லை.

அந்த வகையில் கடந்த காலங்களில் தமிழகத்திலும் கூட காய்ச்சலுக்கான மருந்துகள் சிலவற்றில் தரக்குறைபாடு இருந்ததைக் கண்டறிந்து அதற்கு தீா்வு காணப்பட்டது. எனவே, பொது மக்கள் இந்த விவகாரத்தில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. மருத்துவா்கள் பரிந்துரையுடன் மருந்துகளை உட்கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com