தமிழக அரசு
தமிழக அரசுகோப்புப்படம்

காலை உணவுத் திட்டத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியா: கொள்முதல் கோரியது தமிழக அரசு

Published on

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்துக்காக ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியாவை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீா்மானித்துள்ளது.

இதற்கான கொள்முதல் அறிவிக்கையை தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 34 ஆயிரத்து 987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 17.53 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனா். திட்டத்துக்காக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.600.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் 15-ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. காலை உணவாக பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொள்முதல் கோர முடிவு: தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான சமையல் பொருள்களை கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு நுகா்வோா்கள் கூட்டுறவு கூட்டமைப்பு நிறுவனம் சாா்பில் மூன்று வகையான பொருள்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அதாவது ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, 900 மெட்ரிக் டன் சம்பா ரவை, ஆயிரம் மெட்ரிக் டன் சேமியா ஆகியன தகுதியான நிறுவனங்களிடமிருந்து பெறப்படவுள்ளன. இவற்றுக்கான கொள்முதல் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பூா்த்தி செய்து வரும் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். ரவை மற்றும் சம்பா ரவையை ஒரு கிலோ பாக்கெட்டுகளாகவும், சேமியாவை 200 கிராம் பாக்கெட்டுகளாகவும் பிரித்து பொட்டலங்களாக அளிக்க வேண்டும் என்று கொள்முதல் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com