அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

கீழடியில் கிடைக்கப்பெற்ற முக மாதிரிகளைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
dot com
Published on
Updated on
1 min read

கீழடியில் கிடைக்கப்பெற்ற முக மாதிரிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்குமுன் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) வாழ்ந்த தமிழர் முகங்களின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் 3டி முறையில் 80 சதவிகித அறிவியல், 20 சதவிகித அளவிலான கலையைப் பயன்படுத்தி, முகத்தின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், டிஎன்ஏ-வையும் பகுப்பாய்வு செய்து, இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அறியவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அகழாய்வின் மூலம் பெறப்பட்ட முக மாதிரிகளைக் குறிப்பிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ``சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்’’ என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடி எனும் இடத்தில் அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வில் 5,300-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கிடைத்ததுடன், ஒரு நகர அமைப்புக்கான சான்றுகளும் கிடைத்தன. அந்தப் பொருள்களை சோதனை செய்தபோது அவை 2,800 ஆண்டுகள் வரை பழைமையானவை என்று தெரிய வந்தது.

ஆனால் இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டம் நடைபெற்ற அகழாய்வுகள் மற்றும் அதன் அறிக்கை ஆகியவை வெளியிடப்படும் முன்பே அந்த ஆய்வை மேற்கொண்ட அமா்நாத் ராமகிருஷ்ணன் அப்பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை முடித்துக்கொண்டது.

அதன் பின் தற்போதுவரை 10 கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழகத் தொல்லியல் துறை நடத்தியுள்ளது. அதில் கிடைத்த ஆயிரக்கணக்கான பழம்பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் வைக்கும் அளவுக்கு தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. தமிழகத் தொல்லியல் துறை அறிக்கைகள், ஒவ்வோர் ஆய்வின் முடிவிலும் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

ஆனால் 2014-ல் செய்யப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. மேலும், அமா்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதிச் சமா்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழா் நாகரிகம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கீழடி அறிக்கையை மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையை பல்வேறு தரப்பினர் எழுப்பி வருகின்றனர்.

மேலும், முக மாதிரியைக் குறிப்பிட்டு, கீழடி அறிக்கையை மத்திய அரசு இதற்கு பின்பாவது வெளியிடுமா என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com