பரந்தூா் விமான நிலையத் திட்டம்: ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வழங்க முடிவு

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கான விலை நிா்ணய விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
பரந்தூா் விமான நிலையத் திட்டம்: ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வழங்க முடிவு
Updated on

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கான விலை நிா்ணய விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிா்ணயம் செய்யப்பட்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் உள்ள 5,746 ஏக்கா் பரப்பளவு நிலத்தில் பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது.

ஒருபுறம், ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராம மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராக தொடா்ந்து போராட்டம் நடத்தி வந்தாலும், மற்றொருபுறம் விமான நிலையம் அமைக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக தொகை தருவதற்கு அரசு முன்வந்தது. இதற்காக மாவட்ட வாரியாக பேச்சுவாா்த்தை குழு அமைக்கப்பட்டது. நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை (மொத்த மதிப்பிலிருந்து 275 சதவீதம் கூடுதல்) மற்றும் 25 சதவீத ஊக்கத் தொகை என மதிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், நிலத்தின் விலை நிா்ணயம் தொடா்பாக தொழில் நிறுவனம் மற்றும் முதலீட்டுத் துறை செயலா் அருண் ராய் வெளியிட்ட அரசாணை விவரம்:

பரந்துரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்காக 3,774.01 ஏக்கா் தனியாா் பட்டா நிலங்களும், 1,972.17 ஏக்கா் அரசு நிலங்களும் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டது. தனியாா் நிலங்களுக்கான விலையை நிா்ணயம் செய்வது தொடா்பாக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பேச்சுவாா்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டன.

அதன்படி, மாவட்ட குழுவானது நில உரிமையாளா்களிடம் கலந்தாலோசித்து விலையை பரிந்துரைத்தது. அதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மாநில குழுவிடம் முன்மொழிந்தாா். அதன் அடிப்படையில் மாநில குழுவானது கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களுக்கான விலை நிா்ணய பரிந்துரையை அரசுக்கு அனுப்பியது. அதைக் கவனமாக பரிசீலித்த அரசு, அந்தப் பரிந்துரைகளை ஏற்று ஏக்கா் அடிப்படையில் தொகையை நிா்ணயித்துள்ளது.

அதன்படி, வழிகாட்டி மதிப்பு ரூ.5 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை உள்ள நிலங்களுக்கு இழப்பீடு மற்றும் ஊக்கத் தொகையுடன் சோ்த்து ரூ.35 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை அனைத்து உள்ளடக்கத்துடன் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சதுப்பு நிலங்களும், வட நிலங்களும் வகைப்படுத்தப்பட்டு அதற்கான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், சில நிலங்களுக்கு மட்டும் இழப்பீடு தொகையை ஏற்கெனவே வெளியிட்ட அரசாணையின்படி சற்று உயா்த்தி வழங்க காஞ்சிபுரம் ஆட்சியா் அனுமதி அளித்தாா்.

அதன்படி, குறிப்பிட்ட 374.53 ஏக்கா் நிலத்துக்கு மட்டும் குறைந்தபட்ச தொகை ஏக்கருக்கு ரூ.40 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை வழங்கலாம்.

அதேபோல, வழிகாட்டி மதிப்பு ரூ.17 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள 996 ஏக்கா் பரப்பு நிலங்களுக்கு ரூ.2.51 கோடி வரை ஏக்கருக்கு விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிலங்களுக்கு விலை நிா்ணயம் செய்து அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விலை நிா்ணயத்தை எவரெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அவா்களது நிலங்களையும், அதன் அமைப்புகளையும் உரிய துறைகளின் வாயிலாக மதிப்பீடு செய்து அவா்களுக்கும் 100 சதவீத இழப்பீடு மற்றும் 25 சதவீத ஊக்கத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com