அமைச்சா் தங்கம் தென்னரசு.
அமைச்சா் தங்கம் தென்னரசு.

இனியாவது கீழடி அறிக்கையை வெளியிடுமா மத்திய அரசு? தங்கம் தென்னரசு கேள்வி

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? என நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளாா்.
Published on

தமிழா் நாகரிகம் தொன்மையானது என்பது உலக அரங்கில் நிரூபணமாகி வரும் நிலையில், இனியாவது கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? என நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை அறிவியல் வழியில் ஆய்வு செய்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது பிரிட்டனின் லிவா்பூல் ஜான் மூா்ஸ் பல்கலைக்கழகம்.

கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவா்களாக வாழ்ந்தாா்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பிறகாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழா்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி என்று பதிவிட்டுள்ளாா்.

கீழடி அகழாய்வின் இரண்டு கட்ட ஆய்வறிக்கைகளையும் வெளியிடாமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவதாகவும், மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்றும் அமைச்சா் தங்கம் தென்னரசு ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல் வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com