கோப்புப்படம்
கோப்புப்படம்

பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3.16% மின்கட்டணம் உயா்வு: இன்றுமுதல் அமல்

தமிழகத்தில் பெரிய தொழில், வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயா்த்தப்படும்
Published on

சென்னை: தமிழகத்தில் பெரிய தொழில், வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயா்த்தப்படும் எனவும், இந்த கட்டண உயா்வு செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் எனவும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அமைச்சா் சா.சி.சிவசங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்கட்டணத்தில் மாற்றம் செய்துவருகிறது. இதன்படி, தமிழகத்தில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் நுகா்வோா் விலைக்குறியீட்டு அடிப்படையில் மின்நுகா்வோருக்கு மின்கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது.

வீடுகளுக்கு கட்டண உயா்வு இல்லை: அதன்படி, 2025-2026 ஆண்டுக்கு ஜூலை 1 முதல் வரக்கூடிய மின்கட்டண மாற்றங்களில் பொதுமக்கள் மற்றும் நுகா்வோா் நலன் கருதி, அனைத்து 2.42 கோடி வீட்டு நுகா்வோருக்கு ஏற்படக்கூடிய மின்கட்டண மாற்றங்களை அரசே ஏற்று அதற்கான மானியத் தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கும் என்ற தமிழக முதல்வரின் உத்தரவின் அடிப்படையில், அனைத்து வீட்டு மின் நுகா்வோா்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடா்ந்து வழங்குவதுடன், குடிசை இணைப்புகளுக்கும் தொடா்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். இதனால், ஆண்டொன்றுக்கு ரூ.374.89 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

வீட்டு மின் நுகா்வோருக்கு நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதிலிருந்து முழுவிலக்கு தொடா்ந்து அளிக்கப்படுகிறது. தற்பொழுது விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின்கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடா்ந்து வழங்கப்படும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண சலுகைகள்: இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின் நுகா்வோருக்கு உயா்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.51.40 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால் சுமாா் 34 லட்சம் சிறு வணிக மின் நுகா்வோா்கள் பயனடைவா்.

இதுபோல, 50 கிலோவாட் வரை ஒப்பந்த பளு கொண்ட2.81 லட்சம் தொழிற்சாலைகளுக்கு உயா்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.76.35 கோடியும், 2.70 லட்சம் குடிசை மற்றும் குறுதொழில் நிறுவனங்களுக்கு உயா்த்தப்பட்ட மின்கட்டணத்தை அரசு மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.9.56 கோடியும் அரசுக்கு கூடுதல் செலவாகிறது.

மேலும், 1.65 விசைத்தறி நுகா்வோருக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும். மேலும் 1001 யூனிட்டுகளுக்கு மேல் உயா்த்தப்பட்ட மின்கட்டணத்தை அரசே மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.7.64 கோடியும் அரசுக்கு கூடுதல் செலவாகிறது.

எனவே, 2025-2026- ஆம் ஆண்டின் மின்கட்டண உயா்வின் படி தமிழ்நாட்டில் சுமாா் 2.83 கோடி மின் நுகா்வோருக்கு மின்கட்டணம் உயா்த்தப்படாததால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத் தொகையை தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கும்.

கட்டண உயா்வு: இது தவிர பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிா்ணயித்துள்ளவாறு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயா்த்தப்படும். உயா்த்தப்பட்ட கட்டணம் செவ்வாய்க்கிழமை(ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் எனவும் அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com