கோயில் காவலாளி அஜித்குமாா்
கோயில் காவலாளி அஜித்குமாா்

கோயில் காவலாளி மரண வழக்கு: 5 காவலா்கள் கைது! 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவு!

கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய 5 காவலா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய 5 காவலா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: சிவகங்கை மாவட்டத்தில் ஜூன் 28-இல் ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமாா் என்பவரின் இறப்பு தொடா்பாக, 6 தனிப்படை காவலா்கள் அன்றைய தினமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

காவல் நிலைய மரணம் தொடா்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவுகள் திங்கள்கிழமை இரவு கிடைத்தவுடன், எந்தக் காலதாமதமுமின்றி, உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இவ்வழக்கு கொலை வழக்காக சட்டப் பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடா்புடைய காவலா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் பிஎன்எஸ்எஸ் பிரிவு எண்.196(2)( ஏ) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல் துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது.

கடந்த காலங்களை ஒப்பிடும்போது, கடந்த 5 ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும்போது எவ்வித தயவு, தாட்சண்யமுமின்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றி, ஐந்து காவல்துறை அதிகாரிகளையும் 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

X
Dinamani
www.dinamani.com