
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வைப் பற்றிய அச்சத்தால் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தாதாபுரம் பகுதியைச் சேர்ந்த இந்துமதி(19) என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரசுப்பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 600-க்கு 520 மதிப்பெண்களைப் பெற்ற மாணவி இந்துமதி, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 350 மதிப்பெண் எடுத்த நிலையில், அவருக்கு மருத்துவம் பயில கல்லூரியிகளில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என தீவிரமாக படித்து வந்துள்ளார் இந்துமதி.
இதனிடையே, நீட் தேர்வில் ஒருவேளை இம்முறையும் மதிப்பெண் அதிகம் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிடைக்கவில்லையெனில் என்ன செய்வது? என்ற குழப்பம் மாணவியிடம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்த இந்துமதி, இந்த அச்சத்தால் சனிக்கிழமை(மார்ச் 1) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி இந்துமதியை அவர்தம் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு புதுச்சேரியிலுள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து நீட் தேர்வுக்கு படிக்க வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மாணவி மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்கொலை எண்ணத்தால் 15 வயது முதல் 29 வயதில் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுப்பது அவசியம். இதற்காக 104 ஆலோசனை மையம் - தற்கொலை தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].