தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிவுக்கு அண்ணாமலை பதில்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, அண்ணாமலை.
அமைச்சர் தங்கம் தென்னரசு, அண்ணாமலை.
Published on
Updated on
1 min read

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?” என்று பதிவிட்டார்.

மீண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிவைக் குறிப்பிட்டு அண்ணாமலை, “எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களைக் கூறி, ஆட்சிக்கு வந்த பின், சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது திமுக.

இதையும் படிக்க: தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது. 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டுகள், காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலைத் தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 2014 – 2024 வரை, பத்து ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள், மெட்ரோ திட்டங்கள் என, தமிழக முதலமைச்சரும், திமுக அமைச்சர்களும், தினந்தோறும் பயன்படுத்தும் போக்குவரத்து தொடங்கி, தமிழகத்தில் உங்கள் கண்முன்னே மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு எத்தனை? மத்திய அரசு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக?

உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம். வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு மாறி மாறி குற்றம் சாட்டி வருவது அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com