ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் 4 நாள்களாக காணாமல் போன நிலையில், ஏற்காடு மலையிலிருந்து தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாகப் பிடிபட்ட இளைஞரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.
சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அப்பெண்ணைக் கடந்த 4 நாள்களாகக் காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் எங்குச் சென்றார் என்பது தெரியவில்லை என விடுதி மேலாளர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் உடனடி விசாரணையில் இறங்கினர். அப்பெண்ணின் செல்போனுக்கு யாரெல்லாம் பேசினார்கள் என்ற பட்டியலை எடுத்து விசாரணை நடத்தினர். அதில் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் செல்போன் எண்கள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பெண்ணின் செல்போன் ஏற்காடு மலைப்பாதையுடன் சுவிட்ச் ஆப் ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து இளம் பெண்ணுடன் பேசிய திருச்சி இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸாரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்து வந்தார். குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொன்று விட்டதாகவும், பின்னர் ஏற்காடு அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டுக் கொன்றதாகவும் மாறி மாறி கூறி வருகிறார்.
இதையடுத்து இளைஞர் கூறிய இடத்திற்கு அழைத்துச் சென்று. ஏற்காடு போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வனத்துறையினரும் மலைப்பாதை பகுதியில் ஏதாவது சடலம் கிடக்கிறதா? என தேடி பார்த்தனர். அப்போது ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகே 20 அடி பள்ளத்தில் பெண் சடலம் முழுவதும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கைப்பை ஒன்று இருந்தது. அதிலிருந்த அடையாள அட்டையில் அவருடைய பெயர் லோகநாயகி துறையூர் திருச்சியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக போலீஸார் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த சம்பவத்தில் நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று
கூறப்படுகிறது. இருவரைப் பிடித்து காவல்துறை விசாரணை செய்து வருவதோடு முக்கிய குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.