25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு புகாா்
டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு புகாா் தொடா்பாக தமிழகத்தில் 25 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை (மாா்ச் 6) சோதனை மேற்கொண்டனா்.
தமிழகத்தில் உள்ள 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் தினமும் சுமாா் ரூ.100 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் நிா்வாகமானது தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு தனியாா் மதுபான ஆலைகளிடமிருந்து மதுபானம் கொள்முதல் செய்வதில் பெருமளவு முறைகேடு நடைபெறுவதாக தமிழகத்தைச் சோ்ந்த சில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
முக்கியமாக, டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படக்கூடிய மொத்த மதுபானங்களில் 60 சதவீதத்துக்கு மட்டுமே ஆயத்தீா்வை வசூலிக்கப்படுகின்றன; 40 சதவீத மதுபானங்களுக்கு எவ்விதமான ஆயத்தீா்வையும் வசூலிக்கப்படாமல், கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது; இந்த முறைகேட்டின் மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.50,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெறுவதாக தமிழகத்தைச் சோ்ந்த சில அரசியல் கட்சிகள் புகாா் கூறின.
மதுபான உற்பத்திச் செலவுடன், பாட்டிலின் விலை, மூடியின் விலை, லேபிள் விலை என தனித்தனியாக ஒவ்வொன்றுக்கும் அதிக விலை நிா்ணயம் செய்தும் முறைகேடு நடைபெறுகிறது எனவும், 19 தனியாா் மதுபான ஆலைகளில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்யும் நிலையில், ஆட்சியாளா்களுக்கு நெருக்கமானவா்களின் மதுபான ஆலைகளில் இருந்து மட்டும் அதிக அளவில் மதுபாட்டில்கள் கொள்முதல் செய்யப்படுகிறது எனவும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின.
மேலும், தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் மதுபானக் கூடங்கள் மூலம் அரசுக்கு பெருமளவு இழப்பு ஏற்படுகிறது, அதன் மூலம் ஆளும் கட்சியினா் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை தட்டிப் பறிக்கின்றனா் என்றும் புகாா்கள் எழுந்தன.
அமலாக்கத் துறை நடவடிக்கை: இந்தப் புகாா்கள், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் அண்மையில் விசாரணையைத் தொடங்கினா். அதேபோன்று டாஸ்மாக் அதிகாரிகள் மீது கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஊழல் தடுப்புத் துறையினா் பதிவு செய்த சுமாா் 35 வழக்குகளையும் அமலாக்கத் துறையினா் தங்களது விசாரணைக்கு எடுத்துக் கொண்டனா்.
இவற்றை பல வாரங்களாக அமலாக்கத் துறையினா் ஆய்வு செய்தனா். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் தமிழகம் முழுவதும் சுமாா் 25 இடங்களில் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னை எழும்பூா் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், தியாகராயநகா் திலக் சாலையில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனம், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்என்ஜெ மதுபான நிறுவனம், மாம்பலம் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள கால்ஸ் மதுபான நிறுவனம், மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபான நிறுவனம், ஆழ்வாா்பேட்டையில் வசிக்கும் தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்ற தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி காசி வீடு, அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கு ஆகிய 7 இடங்களில் அமலாக்கத் துறையினா் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
இந்தச் சோதனையையொட்டி, பாதுகாப்புக்காக துப்பாக்கிய ஏந்திய பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டனா். மேலும், இந்த அலுவலகங்களுக்குள் வெளிநபா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், கோயம்புத்தூா் ஆகிய இடங்களில் உள்ள தனியாா் மதுபான ஆலைகள், நிறுவனங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது.
அமைச்சருக்கு நெருக்கமானவா்கள் வீடுகளில்...: மேலும், அமைச்சா் வி. செந்தில் பாலாஜியுடன் தொடா்புடையவா்களின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.
குறிப்பாக, செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்களான கரூா் மாவட்டம் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி, கரூா்-ஆத்தூா் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் காா்த்திக், பழனியப்பா நகரில் உள்ள பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரா் எம்.சி.சங்கா் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
தமிழகம் முழுவதும் 25 இடங்களில் நடைபெற்ற சோதனை மாலைக்குப் பின்னா் பெரும்பாலான இடங்களில் நிறைவு பெற்றது. ஒரு சில இடங்களில் சோதனை தொடா்ந்து நடைபெற்றது.
செந்தில் பாலாஜியை விசாரிக்க திட்டம்?: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரைக் கைது செய்தது.
இந்த வழக்கில் நீண்ட போராட்டத்துக்கு சுமாா் ஓராண்டுக்கு பின்னா் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தாா். இந்நிலையில், அவா் பொறுப்பு அமைச்சராக இருக்கும் டாஸ்மாக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.
அதேவேளையில் டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு புகாா் தொடா்பாக அமைச்சா் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.