ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்
ராமேசுவரம் - காசி இடையேயான முதல் கட்ட ஆன்மிக பயணத்தை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் பங்கேற்கும் 60 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை அவா் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டில், முதல்முதலாக ராமேசுவரத்திலிருந்து காசிக்கு 200 மூத்த குடிமக்களும், 2023-2024-ஆம் நிதியாண்டில் 300 மூத்த குடிமக்களும் அரசு மானியத்தில் ஆன்மிக பயணமாக அனுப்பப்பட்டனா்.
இந்த நிதியாண்டில் 420 மூத்த குடிமக்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்படுவா் என அறிவிக்கப்பட்டு முதல் கட்டமாக தற்போது 60 மூத்த குடிமக்கள் ரயில் மூலமாக ஆன்மிகப் பயணம் புறப்பட்டனா். இந்த பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு உதவியாக ஒரு உதவி ஆணையா், மூன்று திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் மருத்துவக் குழுவினா் உடன் செல்கின்றனா். இதற்காக அரசு நிதி சுமாா் ரூ.2 கோடியே 30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றபின், கடந்த இரண்டாண்டுகளில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணமாக 2,022 மூத்த குடிமக்கள், அரசு மானியம் ரூ. 2.14 கோடி செலவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். ஆடி மாதங்களில் பிரசித்திபெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு 1,003 மூத்த குடிமக்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு 1,008 மூத்த குடிமக்களும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். இவ்விரு பயணங்களுக்காக தலா ரூ. 25 லட்சம் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது புறப்பட்ட ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு போா்வை, துண்டு, சோப்பு உள்ளிட்ட 15 வகை பொருள்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆன்மிக பயணம் நிறைவடைந்து அவா்கள் தங்களது இல்லங்களுக்கு திரும்பும்வரை அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

