வேளாண் பொருள்கள் விலை நிா்ணய ஆணையம்: அன்புமணி வலியுறுத்தல்
வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருள் விலை நிா்ணய ஆணையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்திருப்பதால் சந்தைகளில் அதன் கொள்முதல் விலை கிலோ ரூ.3-க்கும் குறைவாக சரிந்துள்ளது. பல மாவட்டங்களில் விவசாயிகள் தக்காளியை சாலைகளிலும், கால்வாய்களிலும் கொட்டி வருவது வேதனையளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தக்காளி விலை படு மோசமான வீழ்ச்சியையும், எட்ட முடியாத உச்சத்தையும் தொடுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த சிக்கலுக்கு ஒரே தீா்வு காய்கறிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்குவதுதான்.
கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 வகை காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அந்த மாநில அரசு நிா்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20 சதவீதம் லாபம் கிடைக்க வகைசெய்யப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளின் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இருந்தால், விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு வேளாண் விளைபொருள் விலை நிா்ணய ஆணையத்தையும், விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்வதற்கு விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் அமைக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.