ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் சவால்

ஹிந்தி திணிப்பை நிறுத்தங்கள் என்ற தலைப்பில் முதல்வரின் தொடர்..
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஹிந்தி திணிப்பை மையப்படுத்த தயாரா என்று பாஜகவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ‘ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்’ என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் எழுதி வருகிறார்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக வெள்ளிக்கிழமை முதல்வர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”மரம் அமைதியை விரும்பலாம், ஆனால் காற்று ஒருபோதும் அடங்காது’. மக்கள் பணிகளை செய்துகொண்டிருந்த எங்களை, இந்தத் தொடரை எழுதத் தூண்டியது மத்திய கல்வி அமைச்சர்தான். அவர் தனது பொறுப்பை மறந்து, ஒரு மாநிலத்தையே ஹிந்தி திணிப்பை ஏற்கும்படி மிரட்டத்துணிந்தார். தற்போது அவரால் வெல்ல முடியாத ஒரு போராட்டத்தை மீண்டும் தொடங்கவுள்ள விளைவுகளை எதிர்கொள்கிறார்.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள முரண்பாடு என்னவென்றால், அதனை நிராகரிக்கும் தமிழ்நாடு ஏற்கெனவே, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல இலக்குகளை அடைந்துவிட்டது. ஆனால், இந்த கொள்கை 2030-க்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. முனைவர் பட்டம் முடித்தவருக்கு எல்கேஜி மாணவர் விரிவுரை வழங்குவது போல் உள்ளது. திராவிடம் தில்லியில் இருந்து உத்தரவுகளை எடுப்பதில்லை, மாறாக நாடு பின்பற்ற வேண்டிய பாதையை அமைக்கிறது.

தற்போது மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஒரு நகைப்புக்குரிய சர்க்கஸ் போன்று மாறிவிட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹிந்தி திணிப்பை மையமாக வைத்து பிரசாரத்தில் ஈடுபட சவால் விடுகிறேன்.

வரலாறு தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீது ஹிந்தி மொழியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் அல்லது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி திமுகவுடன் இணைந்துள்ளனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு பதிலாக ஹிந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு பொறுத்துக்கொள்ளாது.

திட்டங்களின் பெயர்கள் முதல் மத்திய அரசு நிறுவனங்களுக்கான விருதுகள் வரை, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்தி பேசாதவர்களை மூச்சுத் திணறடிக்கும் அளவுக்கு ஹிந்தி திணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்தி ஆதிக்கத்தை தகர்க்க முன்னணிப் படையாக நின்றது திமுகதான் என்பதை வரலாறு நினைவில் வைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com