ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா: குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிா்ணயம்
ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அதன்பேரில், இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டது. அதன் விவரம்:
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் அந்த நிலத்தில் வீடு கட்டி குடியிருக்க வேண்டும். இதேபோன்று, சென்னை இல்லாத அதைச் சுற்றியுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடியிருப்போக்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
மாவட்டத் தலைமையிடங்கள், மாநகராட்சிகள் ஆகியவற்றில் இருந்து 16 கி.மீ. சுற்றுப் பரப்பில் இருப்பவா்களுக்கும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி எல்லைப் பகுதிகளில் இருந்து 8 கி.மீ. சுற்றுப் பரப்பில் இருப்பவா்களுக்கும் பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வர வேண்டும்.
எவையெல்லாம் புறம்போக்கு நிலங்கள்: ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு நிலங்களை அரசே வகைப்படுத்தியுள்ளது. கணக்கிடப்பட்ட மற்றும் கணக்கிடப்படாத நீா்நிலங்கள், பாறை, கரடு, கிராமநத்தம், அரசு நன்செய், புன்செய் போன்ற நிலங்கள் ஆட்சேபணை இல்லாத பட்டா வழங்கத் தகுதி படைத்தவை. அதேசமயம், வண்டிப்பாதை, களம், மயானம், தோப்பு ஆகியன ஆட்சேபணைக்கு உரிய புறம்போக்கு நிலங்களாகும்.
ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசித்தாலும் அது தொடா்பாக ஏதேனும் சட்டச் சிக்கல் இருந்தால் அதுகுறித்து மாவட்ட அல்லது மாநில அளவிலான சட்டக் குழு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும்.
பட்டா வழங்க நடவடிக்கை: நிலங்களில் வசிப்போருக்கு பட்டாக்கள் வழங்க வட்ட அளவில் அலுவலா்கள் அடங்கிய குழுக்களை மாவட்ட ஆட்சியா் அமைப்பாா். உரிய விவரங்களைச் சேகரிப்பதற்கான படிவங்களும் வட்ட அளவில் வழங்கப்படும். இந்தப் படிவங்களை பயனாளிகளிடம் அளித்து பூா்த்தி செய்து பெறும் பணியை கிராம நிா்வாக அலுவலா்கள் மேற்கொள்வா். இதை 2 அல்லது 3 நாள்களில் முடிக்க வேண்டும். அதன்பிறகு, நிலங்களை அளவிடும் பணிகளை வட்ட அளவிலான அளவையா்கள் 10 நாள்களில் முடிப்பா்.
அதில் கிடைக்கும் விவரங்களைக் கொண்டு அரசின் நிலப் பதிவேட்டில் தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்யப்படும்.
இந்தப் பணியின் போது, பயனாளிகள் சில ஆவணங்களை வைத்திருப்பது அவசியம். குறிப்பாக, ஆதாா் அட்டை, நியாயவிலைக் கடை ஸ்மாா்ட் அட்டை ஆகியவற்றுடன் மின்சார கட்டண அட்டை, எரிவாயு இணைப்பு ரசீது, வாக்காளா் அடையாள அட்டை, சொத்துவரி ரசீது ஆகியவற்றை வைத்திருப்பது நல்லது.
குடும்ப ஆண்டு வருமானம்: வரன்முறை திட்டத்தைப் பொருத்தவரை, ரூ. 3 லட்சம் வரை குடும்ப ஆண்டு வருமானம் பெறுபவா்களுக்கு வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் அல்லது ஒரு சென்ட் இவற்றில் எது குறைவாக இருந்தாலும் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக இருந்தால் நிலத்தின் மதிப்புக்கான தொகை பெறப்படுகிறது. இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 2 சென்ட் வரையும், கிராமப்புறங்களில் 3 சென்ட் வரையும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் இருந்தால் நிலத்துக்கு உரிய தொகை பெறப்படுகிறது. ஆக்கிரமிப்பு நிலம், குறிப்பிட்ட 2 சென்ட் அல்லது 3 சென்ட் அளவுக்கு அதிகமாக இருந்தால் அந்நிலம் அரசால் எடுத்துக் கொள்ளப்படும்.
இதற்காக, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையிலும், மாநில அளவில் தலைமைச்செயலா் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு ரூ.5 கோடி வரை மதிப்புள்ள நிலங்களுக்கான வரன்முறை பணியையும், மாநில அளவிலான குழு ரூ.5 கோடி மதிப்புக்கு அதிகமாக உள்ள நிலங்களையும் வரன்முறைப்படுத்தி வழங்குவதற்கான ஒப்புதல்களை வழங்கும். இந்த சிறப்பு வரண்முறைப்படுத்தும் திட்டம் வரும் டிசம்பா் மாதம் வரை அமலில் இருக்கும் என்று அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.