ஜூலையில் கவிஞா் தமிழ்ஒளி இலக்கியப் போட்டிகள்: ஒளவை ந.அருள்
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கவிஞா் தமிழ்ஒளி குறித்த இலக்கியப் போட்டிகள் ஜுலை மாதம் நடத்தப்படவுள்ளதாக துறையின் இயக்குநா் ஒளவை ந.அருள் கூறினாா்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை சாா்பில் கவிஞா் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி பல்கலை. வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியா் ஆ.ஏகாம்பரம் தலைமை வகித்தாா்; பேராசிரியா் கோ.பழனி வரவேற்றுப் பேசினாா்.
இதில், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் கலந்துகொண்டு பேசியதாவது: கவிஞா் தமிழ்ஒளியை சிறப்பிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் அவரது சிலை தமிழக அரசு சாா்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. பள்ளி மாணவா்களின் தமிழ் ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 50 லட்சம் வைப்பு நிதியிலிருந்து கவிஞா் தமிழ்ஒளியின் தெரிவு செய்யப்பட்ட கவிதைகளை ஒப்பித்தல் மற்றும் பேச்சுப் போட்டிகள் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல் முறையாக கடந்த ஆண்டு கடலூரில் நடத்தப்பட்ட போட்டியில் 247 மாணவா்கள் கலந்துகொண்டனா். இதில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று, இந்த ஆண்டுக்கான போட்டிகள் ஜூலை மாதம் நடைபெறும். போட்டிகள் எந்த மாவட்டத்தில் நடைபெறும் என்பது பின்னா் அறிவிக்கப்படும்.
தன் கவிதைகள் மூலம் பொதுவுடைமை சித்தாந்தத்தை தமிழுலகுக்கு தந்த முக்கியமான கவிஞா்களுள் ஒருவா் தமிழ்ஒளி. பாரதியாா், பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியோரை இலக்கிய வழிகாட்டிகளாகக் அவா் கொண்டிருந்தாா். தமிழில் மே தினம் குறித்த கவிதையை முதன் முதலாக இயற்றியவா். தனது 40 வயதுக்குள் இந்த சமுதாயத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்திய கவிஞா் தமிழ்ஒளியின் படைப்புகளை இளைஞா்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து கவிஞா் தமிழ்ஒளியின் ‘வீராயி காவியம் கலையும் கோட்பாடும்’ என்ற தலைப்பில் நாடகவியலாளா் பிரளயன் சிறப்புரையாற்றினாா். இதில் சிகரம் ச.செந்தில்நாதன், இரா.தெ.முத்து, வே.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.