பிரதமரின் திட்டங்களை மாற்று பெயரில் செயல்படுத்துகிறது தமிழக அரசு: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
பிரதமரின் திட்டங்களுக்கு வேறு பெயரை சூட்டி புதிய திட்டம் போன்று தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
மக்கள் மருந்தக விழிப்புணா்வு நிகழ்ச்சி, சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கலந்து கொண்டு, அங்கிருந்த மக்கள் மருந்தகத்தை பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். இந்நிகழ்வின்போது மக்கள் மருந்தக ஒருங்கிணைப்பு அதிகாரி நாராயணா உடனிருந்தாா். அப்போது செய்தியாளா்களிடம் எல்.முருகன் கூறியதாவது:
அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது பிரதமா் மோடியின் கனவாக உள்ளது. அதனால்தான், தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக தொடங்க அவா் வழிவகை செய்தாா்.
அதன் பயனாக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் 7 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்தான் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.
மக்கள் மருந்தகங்கள்: அதேபோன்று ஏழை - எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் மருந்தகங்களை பிரதமா் திறந்துள்ளாா். இந்தியா முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன.
அங்கு சந்தை விலையிலிருந்து 50 முதல் 80 சதவீதம் குறைவான விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. மற்றொருபுறம் ரூ.5 லட்சம் வரையிலான ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவா்கள் பிரதமரின் திட்டங்களை நகல் எடுத்து (காப்பியடித்து) செயல்படுத்துகிறாா்கள். அவா்கள் சொந்தமாக எதையும் செய்வதில்லை.
மும்மொழிக்கொள்கை: மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கான கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்ட 36 மணி நேரத்துக்குள்ளாகவே 7 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனா். மும்மொழி கொள்கைக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.
உயா் கல்வியில் பொறியியல், மருத்துவப் படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும். உள்துறை அமைச்சரும் அதைத்தான் கூறியிருக்கிறாா். பிரதமா் மோடியும் தமிழுக்கு பெருமை சோ்த்து கொண்டிருக்கிறாா். அதை நாட்டு மக்கள் நன்கு உணா்ந்துள்ளனா். 2026-இல் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அமையாது என்றாா் அவா்.