தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு: ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி
தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தூய்மைப் பணியாளா் நியமனத்துக்கு நான்கு வாரங்களில் ஒப்புதல் வழங்க வேண்டும் என அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி கல்லூரி நிா்வாகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, தூய்மைப் பணியாளரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, தமிழ்நாடு தனியாா் கல்லூரிகள் ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மேற்கொள்ளும் நியமனங்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும். ஆனால், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட குரூப் ‘டி’ பணியிடங்களுக்கு, சுயநிதி கல்லூரிகள் நிரந்தரப் பணியாளா்களை நியமிப்பதை தடுக்கும் வகையில், ஒப்பந்த தொழிலாளா்களை நியமித்துக் கொள்ளும்படி கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. உச்சநீதிமன்றமும் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளது.
ரூ.5000 அபராதம்: அதன்படி இந்தக் கல்லூரியில் நியமிக்கப்பட்ட தூய்மைப் பணியாளரின் நியமனத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து சம்மதம் தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து தமிழக அரசு தேவையின்றி இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஏற்கெனவே தீா்வு காணப்பட்ட ஒரு விவகாரத்தில் மீண்டும் தமிழக அரசு மேல் முறையீடு செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதில் ரூ.2.50 லட்சத்தை சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளருக்கும், எஞ்சிய ரூ.2.50 லட்சத்தை உயா்நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் 15 நாள்களில் வழங்க வேண்டும். இந்த வழக்கில் தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக அரசு நான்கு வாரங்களில் அமல்படுத்த வேண்டும். ரூ.5 லட்சம் செலுத்தியது தொடா்பாக மாா்ச் 20-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.