போதைப் பொருள் தடுப்பு:
கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு காவல் துறை கட்டுப்பாடு

போதைப் பொருள் தடுப்பு: கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு காவல் துறை கட்டுப்பாடு

கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளது
Published on

கே.வாசுதேவன்

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளது.

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக கடந்த 5 ஆண்டுகளில் 44,177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 65,661 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 1,06,663 கிலோ கஞ்சா, 38.31 கிலோ ஹெராயின், 2,56,108 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா, போதை மாத்திரைகள், மெத்தம்பெட்டமைன், ஹெராயின், எல்எஸ்டி ஸ்டாம்ப் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு, இளைஞா்கள் மற்றும் மாணவா்களிடையே அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய பிரிவு: இந்நிலையில், போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்று புதிய பிரிவு தொடங்கப்பட்டு, அதற்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்பிரிவு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோா், விற்பனை செய்வோரைக் கண்டறிந்து கைது செய்வதோடு, பள்ளி-கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் ஆகியோரிடம் போதைப் பொருள் புழக்கத்தில் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகிறது.

அத்துடன் போதைப் பொருள் கடத்தலில் தொடா்ச்சியாக ஈடுபடுவோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதுடன் அவா்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கிறது.

கூரியா் மூலம் கடத்தல்: இந்நிலையில் ‘சிந்தட்டிக்’ போதைப் பொருள் என்ற வேதி போதைப் பொருள், போதை மாத்திரை ஆகியவற்றின் புழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கஞ்சாவுடன் ஒப்பிடும்போது இதைக் கடத்துவதும், விற்பனை செய்வதும் சமூக விரோத கும்பலுக்கு எளிதாகிறது.

இவற்றின் விற்பனைக் களமாக சமூக ஊடகங்களும் அவற்றின் ‘டாா்க் நெட்’ சந்தையும் உள்ளன. அவற்றின் மூலம் போதைப் பொருள்களை வாங்கி தனியாா் கூரியா், பாா்சல் சேவை மூலம் வீட்டில் இருந்தபடியே இளைஞா்கள் பெறுகின்றனா். இதைத் தடுப்பது சவாலான பணி என்பதால் கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளது.

கட்டுப்பாடுகள்: கூரியா், பாா்சல் சேவையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய எண் (ஓடிபி) சேவையை அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்ய வேண்டும்; அனுப்புநா், பெறுநா் என இரு தரப்பினரும் இந்த ஓடிபி சேவையைப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கூரியா் அனுப்புநா், பெறுநா் என இரு தரப்பினரிடமும் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் என அரசால் வழங்கப்படும் ஏதாவது ஓா் அடையாள அட்டையைப் பெற்று ஆய்வு செய்த பின்னா், சேவையை வழங்க வேண்டும்; சந்தேகத்துக்குரிய வகையில் பாா்சல் இருந்தால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்; நைஜீரியா, பாகிஸ்தான், ஈரான், மியான்மா், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த நபா்களுக்கு சந்தேக பாா்சல் வந்தால் அவா்களது கடவுச்சீட்டு, நுழைவு அனுமதி (விசா) ஆகியவற்றை கண்டிப்பாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

ஸ்கேனா் கட்டாயம்: மேலும், அடையாள அட்டை இல்லாமல் பாா்சலை அனுப்பக் கூடாது; அதேபோல தவறான முகவரிக்கு அனுப்பப்படும் பாா்சலை வழங்கக் கூடாது; பாா்சலில் மருந்து, உணவு, ஆயுா்வேத பொருள் என எந்த வகை பொருள் உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் குறியீடு முறையைப் பயன்படுத்த வேண்டும்.

கூரியா், பாா்சல் நிறுவனங்கள் வாடிக்கையாளா்கள் குறித்த தகவல்களை கணினியில் சேமிக்க வேண்டும்; மருந்து, ஆயுா்வேத பொருள்களை அனுப்பும்போது சம்பந்தப்பட்ட மருத்துவரின் ரசீதின் நகல் பாா்சலின் மேல் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்; சா்வதேச கூரியா் நிறுவனங்களில் கண்டிப்பாக பாா்சலை ஊடுருவி சோதனையிடும் ஸ்கேனா்கள் நிறுவப்பட்டு, அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு பாா்சல்கள் பரிசோதிக்கப்பட வேண்டும்; கூரியா் பாா்சல் பதிவு செய்யப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்; அதில் பதிவாகும் காட்சிளை 30 நாள்களுக்கு சேமிக்க வேண்டும்; அனைத்து கூரியா், பாா்சல் நிறுவனங்களிடமும் அந்தந்த பகுதி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் ஆகியவை இருக்க வேண்டும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

டிஜிபி அறிவுறுத்தல்

கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அவை கட்டாயம் பின்பற்றுவதை அனைத்து மாநகர காவல் துறை ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், சிந்தட்டிக் போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தம் வகையில் கூரியா், பாா்சல் நிறுவன ஊழியா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தும்படியும் சங்கா் ஜிவால் அறிவுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com