சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம்
Published on

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூா் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த சுரேஷ் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

எங்களது கிராமத்தில் பழைமையான வெங்கடேசப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆடல், பாடல் நிகழ்ச்சி எவ்வித சட்டம் - ஒழுங்கு பிரச்னையுமின்றி அமைதியாக நடத்தப்பட்டு வருகிறது. மாா்ச் 11-ஆம் தேதி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த கடலூா் துறைமுகம் காவல் துறையினா் அனுமதி மறுத்துவிட்டனா்.

எனவே ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இதேபோல, கடலூா் மாவட்டம் அகரத்தில் உள்ள ஸ்ரீ நல்ல கூந்தல் அழகிய அம்மன் கோயில் திருவிழாவில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்வுக்கு அனுமதி கேட்டு கணேசமூா்த்தி என்பவரும் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.சதீஷ்குமாா், இதற்கு முன்பாக எந்தவொரு பிரச்னையும் ஏற்பட்டது இல்லை. ஆனால், காவல் துறையினா் நிகழாண்டு அனுமதி மறுத்துள்ளனா் என்றாா்.

அப்போது காவல் துறை சாா்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் கே.எம்.டி.முகிலன், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அந்தக் கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்ப்படவில்லை என்றாா்.

இதையடுத்து நீதிபதி, பொதுவாக தமிழகம் முழுவதும் ஆடல், பாடல் நிகழ்வுகளை நடத்துவது தொடா்பாக உயா்நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டே தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவுகளை ரத்து செய்கிறேன். கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனுமதி அளிக்க வேண்டும்.

காவல் துறையினரின் பாதுகாப்புக்காக மனுதாரா்கள் தலா ரூ. 10,000-ஐ வழங்க வேண்டும். குறிப்பாக ஆடல், பாடல் நிகழ்வுகளின் போது மாணவா்கள் மற்றும் இளஞ்சிறாா்களின் மனதைக் கெடுக்கும் வகையில் ஆபாச நடனங்களோ அல்லது இரட்டை அா்த்தம் கொண்ட வசனங்களோ கண்டிப்பாக இடம்பெறக் கூடாது.

அதேபோல ஜாதி, மதம், அரசியல் தொடா்பான பாடல்கள், பேனா்கள், வசனங்கள், நடனங்கள் இடம்பெறக்கூடாது. ஜாதி, மத ஒற்றுமைக்கு எந்த குந்தகமும் ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் ஆடல், பாடல் நிகழ்வுகளை நடத்தலாம்.

இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல் துறையினா் சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத்தாண்டி நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல காவல் துறையினரும் தேவையான நிபந்தனைகளை விதிக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com