கருணை பணி: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவா்கள் கோரிக்கை

நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை
Updated on

சென்னை: கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவா் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா காலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த காது, மூக்கு, தொண்டை நிபுணா் மருத்துவா் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அரசுப் பணி வழங்கப்படவில்லை. அதேபோன்று தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்த பல அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு தற்போது வரை மாநில அரசு, நிவாரணமோ, பணி நியமனமோ வழங்காதது வருத்தமளிக்கிறது.

இதுதொடா்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், கரோனாவால் உயிரிழந்த மருத்துவா் விவேகானந்தன் குடும்பம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தாா்.

அது தவறு என தகவல் உரிமை சட்டத்தின் மூலம் விவேகானந்தனின் மனைவி உறுதி செய்துள்ளாா். இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com