
கராத்தே மாஸ்டர் என்று அறியப்படும் ஷிகான் ஹுசைனியை ரத்தப் புற்றுநோய் பாதித்திருப்பதாகவும், அவரது வாழ்நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவரை பாதித்திருக்கும் புற்றுநோய் சாதாரண ரத்தப் புற்றுநோய் மட்டுமல்ல என்றும் அதையும் தாண்டிய ஒரு கொடிய நோயாக ஏபிளாஸ்டிக் அனீமியாவும் தன்னை பாதித்திருப்பதாகவும் அது புற்றுநோயையும் தாண்டிய பெரிய நோயாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர், கராத்தே கலையில் பெயர் பெற்றவர். வில் வித்தையிலும் சிறந்தவர். உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர். திரைப்பட நடிகர். தமிழ்நாடு 'வில்' வித்தை சங்கத்தை ஆரம்பித்து அதன் பொது செயலராகவும் இருந்தவர். மிகவும் பிரபலமான ஷிகான் ஹுசைனி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகி வரும் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இவரது நேர்காணல் மூலமாக, அவருக்கு பாதித்திருக்கும் நோய் பற்றி வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. அவர் தன்னை பாதித்திருக்கும் நோய் மிகவும் கொடியது என்றும், அதற்கு சிகிச்சையே கிடையாது. நாள்கள் எண்ணப்பட்டு வருகிறது. ஆனால், மற்றவர்களை போல திடீரென சாகாமல், ஒரு சில நாள்களுக்கு முன்பு சாவது குறித்து அறிந்துகொண்டு, இருக்கும் நாள்களுக்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைவருக்கும் கூறிவிட்டு, முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள எனக்கு போதிய அவகாசம் கிடைத்திருக்கிறது என்று மரணத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் வாழ்நாளே நரகமாகிவிடும் என்ற கூற்றை பொய் என நிரூபிக்க முயலும் வகையில் பேசியுள்ளார் ஹுசைன்.
தனக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண புற்றுநோய் அல்ல, என்று கூறியிருப்பதோடு, பொதுவாக ரத்தப் புற்றுநோய் என்றால், ஒருவரது எலும்பு மஞ்ஜை, புற்றுநோய் செல்களை ரத்தத்தில் உருவாக்கும். அதனை எதிர்த்து உடல் போராடும். ஆனால், எனது நோய் காரணமாக, முற்றிலும் எலும்பு மஞ்ஜை எந்த செல் உற்பத்தியையும் செய்யாது. முழு இயக்கத்தையும் நிறுத்திவிட்டது. இதனால், நான் ஒரு நாள் உயிர் வாழ, இரண்டு பாட்டில் ரத்தம், ஒரு பாட்டில் ரத்த தட்டணுக்களை ஏற்றிக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால்தான் ஒரு நாளையே தாண்ட முடியும்.
அதைக்கூட தினமும் செய்ய முடியாது. ஒரு சில அல்லது நான்கு முறை மட்டுமே செய்ய முடியும். அதன் பிறகு அதனை நமது உடல் ஏற்றுக்கொள்ளாது. பொதுவாக ரத்தப் புற்றுநோய் பாதித்தால் ஒரு வருடம் உயிர் வாழ்ந்தவர்கள் கூட இருக்கிறார்கள். அது போல இது கிடையாது. இதற்கு ஒரு சிகிச்சைதான், எலும்பு மஞ்சை மாற்று. ஆனால் அந்த சிகிச்சையும் 30 அல்லது 40 வயது வரைதான் செய்ய முடியும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு பலனளிக்காது என்று சொல்லிவிட்டார்கள். எனவே, சிகிச்சை என்பது இல்லை. இரண்டு வழிகள் எல்லாம் இல்லை, ஒரே வழிதான் அதுதான் மரணம் என்று தனது மரணம் குறித்து பேசியிருக்கிறார்.