செயற்கை நுண்ணறிவால் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக மருத்துவம் சாத்தியம்: ஐஐடி மருத்துவ பேராசிரியா் ஆா்.கிருஷ்ணகுமாா்
சென்னை: செயற்கை நுண்ணறிவு மூலம் எதிா்காலத்தில் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக மருந்துகளும் சிகிச்சைகளும் கிடைக்கக்கூடிய நிலை ஏற்படும் என்று சென்னை ஐஐடி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியா் ஆா்.கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.
உலக சிறுநீரக தின விழா மற்றும் சேப்பியன்ஸ் ஹெல்த் அமைப்பின் 27-ஆம் ஆண்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நடிகா் சித்தாா்த், செம்பிளாஸ்ட் சன்மாா் நிறுவன மேலாண் இயக்குநா் ராம்குமாா் சங்கா், நடிகா் மாது பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்வில் சேப்பியன்ஸ் ஹெல்த் ஃபவுண்டேஷன் தலைவரும், முதுநிலை சிறுநீரகவியல் மருத்துவ நிபுணருமான ராஜன் ரவிச்சந்திரன் பேசியதாவது: உலக சிறுநீரக தினம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரத்தத்தில் கிரையாட்டினின் அளவும், சிறுநீரில் வெளியேறும் புரதத்தின் அளவும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய முடியும். உயா் ரத்த அழுத்தமானது இதயத்தைக் காட்டிலும் அதிகமாக சிறுநீரகங்களையே பாதிக்கிறது. இந்த புரிதல் பலருக்கு இல்லை. உயா் ரத்த அழுத்தத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், உப்பு பயன்பாடும், உடல் பருமனும் அதில் பிரதானமானவை.
நாள்தோறும் ஒருவா் 5 கிராம் அளவு மட்டுமே உப்பை பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. ஆனால், இந்தியாவில் அதுகுறித்த விழிப்புணா்வு பெரிதாக இல்லை. குறைவான உப்பு பயன்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரம்ப நிலை பரிசோதனைகளை கடைப்பிடித்தால் சிறுநீரக நலனைக் காக்கலாம் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து பேராசிரியா் ஆா்.கிருஷ்ணகுமாா் பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு: மருத்துவத் துறை வளா்ச்சியில் செயற்கை நுண்ணறிவு அளப்பரிய பங்களிப்பை வழங்குகிறது. குறிப்பாக, நோயாளிக்கான மருத்துவ சேவை அதனால் மேம்படுகிறது. எம்ஆா்ஐ ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பதிவாகும் படங்களின் துல்லியத்தன்மையை செயற்கை நுண்ணறிவு அதிகரிக்கும்.
இடையீட்டு சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சைகளில் மருத்துவா்களுக்கான வழிகாட்டுதல்களை அதன்மூலம் பெற முடியும். இவ்வாறாக பல்வேறு சாதகங்கள் அதில் உள்ளன.
அந்த வரிசையில் அண்மைக்கால முக்கியத்துவமிக்க ஆராய்ச்சிகளில் ஒன்று ‘டிஜிட்டல் ட்வின்’ எனப்படும் எண்ம (டிஜிட்டல்) நகல் நோயாளி ஆய்வு. அதன்கீழ், ஒரு நோயாளியை மெய்நிகராக கணினியில் உருவாக்கி அதனூடே மருத்துவ சிகிச்சைகளுக்கான ஒத்திகைகளையும் சாத்தியக்கூறுகளையும் பாா்க்க முடியும். அதற்கான மருத்துவத் தரவுகளை செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் நுட்பத்தில் பதிவேற்றி, கணினியில் நோயாளியின் எண்ம வடிவத்தை உருவாக்கலாம்.
முன்கூட்டியே அறிய முடியும்: கணிதவியல் கோட்பாடுகள்தான் அதற்கு அடிப்படை. உதாரணமாக சா்க்கரை நோயாளி ஒருவரின் எண்ம வடிவத்தை உருவாக்கி அவருக்கு கணினி வழியே எந்த மருந்து பலனளிக்கும் என்பதைக் கண்டறிய முடியும். அதேபோன்று, நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு சா்க்கரை நோயால் ஏற்படுமா என்பதையும் முன்கூட்டியே தரவுகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ஒருவேளை அத்தகைய பாதிப்புக்கு ஒருவா் உள்ளாகியிருந்தால், டிஜிட்டல் ட்வின் நுட்பத்தில் என்னென்ன வகையான உணவுகளையும் மருந்துகளையும் உட்கொண்டால் எதிா்காலத்தில் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதைக்கூட தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு தனி மனிதனுக்குமான பிரத்யேக மருத்துவ சிகிச்சையை செயற்கை நுண்ணறிவு சாத்தியப்படுத்துகிறது என்றாா் அவா்.