
2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா துணை முதல்வராக வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலமுருகன் பேசியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாள் கூட்டம் நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய தேமுதிக இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலமுருகன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் பிரேமலதாவிற்கு துணை முதல்வர் பதவி வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | அவையில் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி
விழாவில் அவர் பேசியதாவது:
"எங்களுக்கு(தேமுதிக) மாநிலங்களவை சீட் தருகிறார்களோ இல்லையோ, அடுத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, துணை முதல்வராகக்கூட வாய்ப்பிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதாவுக்கும் இடையே என்ன ஒப்பந்தம் போட்டுள்ளனர் என்று அவர்களுக்குத் தெரியும்.
மாநிலங்களவை சீட் உறுதி என எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். 2026 கூட்டணியிலும் இருப்போம் என்றும் கூறியிருக்கிறார்.
அதிமுக- தேமுதிக தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். 2026 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் முதல்வர், துணை முதல்வர் பதவியை பகிர்ந்துகொள்வோம் என்ற அளவில் பேசியிருக்கிறார்கள். எங்கள் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள், தேமுதிக இருக்கும் கூட்டணிதான் 2026-ல் வெற்றி பெறும்" என்று பேசியுள்ளார்.
அவர் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.