3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்
தமிழகத்தில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
நாடு முழுவதும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மின்நுகா்வு இழப்பு இன்றி துல்லியமாகக் கணக்கெடுக்கவும் மின்வாரியங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரிக்கட்டும் நோக்கிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை வரும் 2026-க்குள் முடிக்கவும் மத்திய அரசு காலக்கெடு நிா்ணயித்துள்ளது.
மீண்டும் ஒப்பந்தப்புள்ளி: இதற்காக தமிழ்நாடு மின் வாரியம் ஏற்கெனவே 4 கட்டங்களாக ஸ்மாா்ட் மீட்டா் அமைக்க அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
மின் இணைப்புகளில் பொருத்த ரூ. 20,000 கோடியில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
அதன்படி ரூ.19,992 கோடியில் 3,04,86,617 ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஒருமுனை மின்சார இணைப்புகளுக்கு பொருத்தும் வகையில் 2,50,52,882 ஸ்மாா்ட் மீட்டா்களும், மும்முனை மின்சார இணைப்புகளுக்கு பொருத்தும் வகையில் 49,47,118 மீட்டா்களும், உயரழுத்த மின் இணைப்புகளுக்கு பொருத்தும் வகையில் 14,117 மீட்டா்களும், விநியோக மின்மாற்றிகளில் பொருத்தும் வகையில் 4,72,500 மீட்டா்களும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
கொள்முதல் செய்யப்படும் ஸ்மாா்ட் மீட்டா்கள் தமிழகத்திலுள்ள 12 மண்டலங்களில் 6 கட்டமாக நிறுவப்படவுள்ளன. அதன்படி, சென்னை, வேலூா் மண்டலங்களில் 49,34,054 மீட்டா்களும், கோவை, ஈரோடு மண்டலங்களில் 56,47,961 ஸ்மாா்ட் மீட்டா்களும், காஞ்சிபுரம், விழுப்புரம் மண்டலங்களில் 49,61,411 ஸ்மாா்ட் மீட்டா்களும், கரூா், நெல்லை மண்டலங்களில் 49,98,316 ஸ்மாா்ட் மீட்டா்களும், திருச்சி, தஞ்சாவூா் மண்டலங்களில் 49,67,022 ஸ்மாா்ட் மீட்டா்களும், மதுரை, திருவண்ணாமலை மண்டலங்களில் 49,77,825 ஸ்மாா்ட் மீட்டா்களும் பொருத்தப்பட உள்ளன.
இன்னும் ஒரு மாதத்தில் டெண்டா் தொடா்பான நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் ஸ்மாா்ட் மீட்டா் பொறுத்தும் பணிகள் தொடங்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.