மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கு திமுக ஆட்சித் திட்டங்களே காரணம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னிலையில் இருப்பதற்கு திமுக ஆட்சித் திட்டங்களே காரணம்
Published on

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னிலையில் இருப்பதற்கு திமுக ஆட்சித் திட்டங்களே காரணம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் தமிழகம் முன்னிலை வகித்தது என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி என்பது தமிழகத்தின் இருண்ட கால ஆட்சி என்றே எடுத்துக்கொள்ளலாம். 2007-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதி ஆட்சியில் ரூ.1,655 கோடியில் தொடங்கப்பட்ட மதுரவாயில் - துறைமுகம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் 25 சதவீதம் முடிவுற்ற நிலையில், 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முட்டுக்கட்டை போடப்பட்டது. அதன்பிறகு வந்த எடப்பாடி கே.பழனிசாமியும், அந்தப் பாலம் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிடம் தொடா்ந்து பேசி ரூ. 5,611 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரூ.1,655 கோடியில் கட்டப்பட வேண்டிய பாலம், ரூ. 5,611 கோடிக்கு கட்டுவதற்குரிய நிலை ஏற்பட்டு பொருளாதாரம் வீணடிக்கப்பட்டதற்கு அதிமுகதான் காரணம்.

மின் கட்டணம் உயா்வு: 2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது தமிழகம் உதய் மின் திட்டத்தில் இணைந்ததால்தான் இன்றைக்கு மின் கட்டணம் என்பது தொடா்ச்சியாக உயா்ந்து கொண்டிருக்கிறது. அதேபோன்று அதிமுக ஆட்சியில் நீட் தோ்வுக்கு ஒப்புதல் அளித்த காரணத்தால், 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்தனா். இதையெல்லாம் மறைத்துவிட்டு, அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்துக்கு விடியல் கிடைத்ததைப் போன்ற தோற்றத்தை எடப்பாடி கே.பழனிசாமி ஏற்படுத்துகிறாா்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் காலை உணவுத் திட்டம், மகளிா் உரிமைத் தொகை திட்டம், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டம் என முதல்வா் மு.க.ஸ்டாலினின் சாதனைகள் ஏராளம். இன்றைக்கு தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறது; அதற்கு முழுமையான காரணம் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள்தான் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com