208 நலவாழ்வு மையங்களில் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழகத்தில் மேலும் 208 நலவாழ்வு மையங்களைத் தொடங்கும் வகையில், மருத்துவா், செவிலியா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியிலும், பிற இடங்களிலும் மொத்தம் 708 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140 மையங்கள் உள்பட 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி முதல்வா் திறந்து வைத்தாா்.
ஒவ்வொரு நகா்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு சுகாதார ஆய்வாளா் மற்றும் ஒரு துணை பணியாளா் மாவட்ட சுகாதார சங்கங்களின் மூலம் பணியமா்த்தப்பட்டனா்.
காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும் இந்த மையங்களில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் அளிக்கப்படுகின்றன. நோயாளிகள் மருத்துவா்களை காணொலி மூலமாக தொடா்புகொண்டும் சிகிச்சை பெறமுடியும்.
இந்நிலையில், மேலும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை தொடங்கும் வகையில், மருத்துவா்கள், செவிலியா்கள் நியமனத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் சாா்பில் 208 மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள், 832 மருத்துவப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்படவுள்ளனா். இதில், மருத்துவா்களுக்கு மாதம் ரூ. 60,000, செவிலியா்களுக்கு ரூ. 18,000 ஊதியம் வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயக் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிடங்களுக்கு மாா்ச் 24-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். நோ்முகத் தோ்வு ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்டு, 2-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.