
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது முந்தைய நாள், நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும்.
அதேபோல, தமிழ்நாடு அரசும் நாளை(மார்ச் 14) பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதையடுத்து இன்று(மார்ச் 13) தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு இதனை தயாரித்துள்ளது.
அறிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என்றும் தனி நபர் வருமானம் ரூ. 2.78 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் தனி நபர் வருமானம், தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என்றும் கரோனாவுக்குப் பிறகு தமிழகத்தில் சேவைத் துறைகள் மீண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | புற்றுநோய்க்கு மருந்தாகிறதா காளான்? - புதிய கண்டுபிடிப்பு!
பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.