அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை! ஈட்டிய விடுப்பை சரண் செய்யலாம்!
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
அப்போது அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் சலுகை குறித்த அறிவிப்பை தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
அமைச்சர் பேசியதாவது:
”கரோனா காலத்தில் நிதி நெருக்கடியின் காரணமாக ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் முறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறும் சலுகை மீண்டும் செயலாக்கத்துக்கு கொண்டுவரப்படுகிறது.
வருகின்ற ஏப்ரல் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. ஆண்டுக்கு 15 நாள்கள் வரை சரண் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலின் காரணமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.