
தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு வரும் வருவாய் மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது தொடர்பான விளக்கம் இன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கும் வரவு - செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேட்டில் வரைபடத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழக அரசின் வருவாய் எந்த வழிகளில் வருகிறது, அந்த தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது எனப்தை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் எவ்வாறு ஈட்டப்படுகிறது. அந்த ஒரு ரூபாய் எந்த வகைகளில் செலவிடப்படுகிறது என்ற விவரத்தை தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ளது.
அதில் மேலோட்டமாகப் பார்க்கும்போது, தமிழக அரசுக்கு வரும் ஒரு ரூபாயில் 45.6 காசுகள் மாநிலத்தின் சொந்தவரி வருவாய் மூலம் பெறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கால் பங்கு சொந்த வரி வருவாயாகவே வருகிறது.
அடுத்து, 31.4 காசுகள் பொதுக்கடன் மூலம் மாநிலத்துக்கு பெறப்படுகிறது. அடுத்து, மத்திய வரிகளின் பங்காக 12 காசுகள் பெறப்படுகிறது. மாநிலத்தின் சொந்தவரி அல்லாத வருவாயாக 5.9 காசும், மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் மூலம் 4.9 காசும், கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு 0.2 காசும் பெறப்படுகிறது.
அடுத்து, இவ்வாறு பெறப்படும் ஒரு ரூபாய், தமிழகத்தின் தேவைகளுக்காக எவ்வாறு செலவிடப்படுகிறது என்றால்...
தமிழக மக்களுக்கு, அரசால் வழங்கப்படும் உதவித் தொகைகளும், மானியங்களுக்குமே அதிகபட்சமாக 31.6 காசுகள் செலவிடப்படுகிறது. அடுத்துதான், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கான சம்பளங்கள் 18.6 காசுகள் என்ற அளவில் உள்ளது.
இதுவரை மாநில அரசு வாங்கிய கடன்களுக்கு வட்டி செலுத்த 14.5 காசுகள் செலவிடப்படுகிறது. கடன்களை திருப்பிச் செலுத்த 9.7 காசுகளும், மூலதனச் செலவுகளுக்கு 11.8 காசுகளும் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் செயல்பாடுகள், பராமரிப்புப் பணிகளுக்காக 3.5 காசுகளும் பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் வழங்க 1.8 காசுகள் செலவிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.