
தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர்,
"நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிதாக இந்த 5 விளைபொருளுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும்" என்றார்.
வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான 'டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி' ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு!
அண்மைக்காலங்களில் மக்கள்தொகைப் பெருக்கம், காலநிலை மாற்றம், வேளாண் தொழிலாளர் மற்றும் இயந்திரப் பற்றாக்குறை, பூச்சி, நோய்த்தாக்குதல், வேளாண் பொருள்களின் நிலையற்ற விலை போன்ற காரணங்களினால் வேளாண்மையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
இவற்றிற்கு, புதுமையான சிந்தனை மற்றும் நவீன ஆராய்ச்சி முறைகளைக் கொண்டு விரைந்து தீர்வு காண்பது அவசியமானதாகும்.
எனவே, பல்வேறுவிதமான முக்கிய சவால்களை வரிசைப்படுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையே வேளாண் நிரல் திருவிழா (Agri-Hackathon) மூலம் தகுதியான தொழில்நுட்பங்களைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகள் (mentoring) மற்றும் நிதி உதவி (grant) வழங்கப்படும்.
இதற்கென வேளாண் விஞ்ஞானி "டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்" அவர்களது பெயரில் ஆராய்ச்சி நிதியாக 2025-26 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.