நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் "அக்ரி ஸ்டேக்'!

பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, "அக்ரி ஸ்டேக்' வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on
2 min read

பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, "அக்ரி ஸ்டேக்' வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் நில ஆவணங்கள் அனைத்தையும் இந்த வலைதளம் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தப் பணிகள் உழவர் நலத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், நிலத்தின் பட்டா, சிட்டா ஆகியவற்றின் மூலம் இந்த வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகையைப் பெறுவதற்கு பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த வலைதளப் பதிவு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் 37 மாவட்டங்களைச் சேர்ந்த(சென்னை நீங்கலாக) 22.48 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் கௌரவ நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

துறை வாரியாக கிராமங்கள் ஒதுக்கீடு: வலைதளப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்க, வேளாண்மைத் துறை மட்டுமின்றி அதன் சகோதரத் துறைகளுக்கும் கிராமங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேளாண்மைத் துறைக்கு 10,528 வருவாய் கிராமங்கள், தோட்டக்கலைத் துறைக்கு 5,226, வேளாண் வணிகத் துறைக்கு 982, வேளாண் பொறியியல் துறைக்கு 337, வேளாண் விதை சான்றளிப்புத் துறைக்கு 212 வருவாய் கிராமங்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 27.65 லட்சம் விவசாயிகளில் 13.34 லட்சம்(48.26 சதவீதம்) விவசாயிகளின் விவரங்கள் அக்ரிஸ்டேக் வலைதளத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே போன்று தோட்டக்கலைத் துறை 14.27 லட்சம் விவசாயிகளில் 7.10 லட்சம் பேரின்(49.77 சதவீதம்) விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேளாண் வணிகத் துறை 2.46 லட்சம் பேரில் 1.21 லட்சம்(49.46 சதவீதம்), வேளாண் பொறியியல் துறை 95ஆயிரம் பேரில் 41ஆயிரம்(42.86 சதவீதம்), வேளாண் விதை சான்றளிப்புத் துறை 60ஆயிரம் பேரில் 28ஆயிரம் (46.77 சதவீதம்) விவசாயிகளின் விவரங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்தால் மட்டுமே உதவித் தொகை: வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: "அக்ரி ஸ்டேக்' வலைதளப் பதிவுக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. விவரங்களைப் பெறச் செல்லும் அலுவலர்களிடமும் முறையான தகவல் தெரிவிப்பதில்லை. இதனால், வலைதளப் பதிவேற்றும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து உழவர் நலத் துறை செயலரிடம், பல்வேறு மாவட்டங்கள் தரப்பிலும் தெரிவித்தோம்.

இந்த நிலையில், கௌரவ நிதி உதவித் தொகை பெற பதிவு செய்த பெற பதிவு செய்த விவசாயிகளின் பட்டியலுக்குப் பதிலாக நிதி உதவி பெறும் விவசாயிகளின் தரவுகளை மட்டுமே பதிவு செய்தால் போதுமானது என இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வலைதளத்தில் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே, 20-ஆவது தவணைத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

'தமிழகத்தில் 37 மாவட்டங்களைச் சேர்ந்த(சென்னை நீங்கலாக) 22.48 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் கௌரவ நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நில ஆவணங்கள் அனைத்தையும் "அக்ரி ஸ்டேக்' வலைதளம் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com