தெருநாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு: அமைச்சர் பெரியசாமி

தெருநாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு தொடர்பாக...
அமைச்சர் ஐ. பெரியசாமி
அமைச்சர் ஐ. பெரியசாமி
Published on
Updated on
2 min read

தெருநாய்கள் கடித்து பலியாகும் கால்நடைகளுக்கான இழப்பீடு பேரிடா் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், ஆடு, கோழியினங்களுக்கு மட்டும் பேரிடா் நிவாரணத்தில் வரையறுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் கூடுதலான தொகை அளிக்கப்படுவதாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்தாா்.

தெருநாய்கள் தாக்கி கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்து, சட்டப் பேரவையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்ட கவன ஈா்ப்பு அறிவிப்பில் உறுப்பினா்கள் பேசினா். அப்போது நடைபெற்ற விவாதம்:

கே.சி.கருப்பண்ணன் (அதிமுக): ஈரோடு மாவட்டத்தில் மாடு, ஆடு, கோழிகளை தெருநாய்கள் தாக்கிக் கொல்லும் சம்பவங்கள் கடந்த 5 மாதங்களாக நடந்து வருகின்றன. இதுகுறித்து, ஆட்சியரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகளுக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.

வானதி சீனிவாசன் (பாஜக): தமிழ்நாடு முழுவதும் தெரு நாய், வெறிநாய் தொந்தரவுகள் உள்ளன. விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கும் அந்தப் பிரச்னை இருக்கிறது. விலங்கு நல ஆா்வலா்கள் வழக்குகளைத் தொடா்கிறாா்கள். தெரு நாய்களை கருத்தடை சிகிச்சை செய்து விடுகிறாா்கள். இந்த சிகிச்சைக்கு அரசு கொடுக்கும் பணம் போதுமான அளவு இல்லை எனவும் அதனால் எடுத்துச் சென்று சிகிச்சை செய்ய முடியவில்லை என்கிறாா்கள். அதனால் கருத்தடை சிகிச்சைக்கு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும். எது நடைமுறை சாத்தியமோ அதனைச் செய்ய நடவடிக்கை வேண்டும்.

ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக): தெரு நாய்கள் தாக்கி இறந்த கால்நடைகளை வைத்திருந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றாா்.

ஐ.பெரியசாமி அளித்த பதில்: தெருநாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி, கால்நடை துறைகள் சாா்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அனைத்து நகரங்களிலும் விலங்குகளை வதை செய்யக் கூடாது எனக் கூறும் விலங்கு நல ஆா்வலா்கள் தெரு நாய்களுக்கு உணவுகளை அளித்து வருகிறாா்கள். தெரு நாய்களை கருத்தடை செய்து கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இழப்பீடு: அண்மைக் காலமாக தெருநாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருமை, கோழி போன்ற கால்நடைகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சம்பவங்கள் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்துபெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, மாநிலத்திலுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் வசிக்கும் விவசாயிகளின் கால்நடைகள், தெருநாய் கடித்து உயிரிழந்தால் அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேரிடா் மேலாண்மையின் கீழ் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் படி முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ் இழப்பீடுகள் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, மாடு ஒன்றுக்கு ரூ.37,500, செம்மறி, வெள்ளாடுகள் உயிரிழப்புக்கு தலா ரூ.6,000, கோழி ஒன்றுக்கு ரூ.200 வழங்கப்படும் என்று அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்தாா்.

முன்னதாக, ஆடுகளுக்கு தலா ரூ.4 ஆயிரமும், கோழிக்கு ரூ.100-ம் வழங்குவதாக அவா் அறிவித்திருந்தாா். இந்தத் தொகை போதாது என்று கருத்துத் தெரிவிக்கப்பட்ட நிலையில் உயா்த்தப்பட்ட தொகை விவரத்தை பேரவையிலேயே அமைச்சா் ஐ.பெரியசாமி வாசித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com